http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 154

இதழ் 154
[ மே, 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒரு நாடகக் காணி கல்வெட்டான வரலாறு
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம்
பிறவாதான் ஈசுவரம்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 1
இதழ் எண். 154 > கலையும் ஆய்வும்
ஒரு நாடகக் காணி கல்வெட்டான வரலாறு
அர. அகிலா, இரா. கலைக்கோவன்

தஞ்சாவூரில் பெரிய திருக்கற்றளியாய்ப் பேரரசர் முதல் ராஜராஜரால் எழுப்பப்பட்டு அவரால் ராஜராஜீசுவரம் என்று பெயரிடப்பெற்ற திருக்கோயிலில் பதிவாகியிருக்கும் கல்வெட்டுகள் சோழர் ஆட்சிமுறையையும் பொ. கா. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய கலை, பண்பாட்டு வரலாற்றையும் செவ்வனே நிறைத்துள்ளன. அவற்றுள் ஒன்று, பொ. கா. 1055இல் இக்கோயிலில் நிகழ்த்தப்பட்ட ராஜராஜேசுவர நாடகத்தைப் பற்றிப் பேசுகிறது.



இராஜராஜரின் பெயரரும் முதல் ராஜேந்திரரின் மகனும் முதல் ராஜாதிராஜரின் தம்பியுமான இரண்டாம் ராஜேந்திரரின் 6ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இத்தமிழ்க் கல்வெட்டு, கோயில் விழாவில் அமைந்த ஒரு கலைநிகழ்வு குறித்த தகவல் கோயில்சுவரில் கல்வெட்டாக இடம்பெற எத்தகு நடைமுறைகளைச் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை வெளிச்சப்படுத்துகிறது. இதுவரை நாடகம் நடந்த கதைதான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அதன் பின்னணி நடைமுறைகள் காட்சிக்கு வரவில்லை.

சோழப் பேரரசர் இரண்டாம் ராஜேந்திரர் தம் நான்காம் ஆட்சியாண்டு முடிந்த 160ஆம் நாள் இராஜராஜேசுவரமுடையார் கோயிலில் ராஜராஜேசுவர நாடகமாட சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆச்சாரியருக்கும் அவர் வழியினருக்கும் காணியாக (ஊதிய உரிமை), ராஜகேசரி எனும் மரக்காலுக்கு இணையான ஆடவலான் எனும் மரக்காலால், நாளும் தூணி நெல்லாக, ஆண்டுக்கு 120 கலம் நெல் தேவர் பண்டாரத்திலிருந்து (கோயில் கருவூலம்) வழங்க வாய்மொழியாக ஆணை பிறப்பித்தார். அவ்ஆணையை அரசுஅலுவலர் உதாரவிடங்க விழுப்பரையர் தம் எழுத்தினால் திருமந்திரவோலையாக்கிக் கோயில் ஸ்ரீகாரியக் கண்காணிக்கும் கரணத்தார்களுக்கும் அனுப்ப, அதை அவர்கள், 'பிரசாதம் செய்தருளி வந்த திருமுகமாக' ஏற்றனர்.

அரசரின் இந்த அறிவிப்பைக் கோயிலில் கல்வெட்டாகப் பதிவுசெய்ய மற்றோர் அரசாணை வேண்டியிருந்தது. அதன் பொருட்டு அரசர் தம் ஆறாம் ஆட்சியாண்டு முடிந்த 160ஆம் நாள், 'ஆச்சாரியன் காணி அனுபவித்து வருமாறே ராஜராஜேசுவரமுடையார் கோயிலில் கல்வெட்டுவித்துக் குடுக்க' என்று தண்டநாயகம் (படைத்தலைவர்) பரகேசரிப் பல்லவரையருக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார். அவ்ஆணையை எதிரிலிசோழ மூவேந்தவேளார் தம் எழுத்தினால் திருமந்திரவோலையாக்கி அனுப்ப, கோயில் அலுவலர்கள், 'பிரசாதம் செய்தருளி வந்த' இரண்டாம் திருமுகமாக அதைப் பெற்றனர்.

அரசரின் இந்த இரண்டாம் ஆணையை உறுதி செய்து ராஜராஜ பிரும்ம மகாராயர் ஓலை அனுப்ப நாடகக்காணி கல்வெட்டானது. அதில், சாந்திக்கூத்தரான திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆச்சாரியர், ராஜராஜேசுவரமுடையார் கோயிலில் வைகாசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேசுவர நாடகம் நிகழ்த்தியமையும் அதற்கென அவருக்கும் அவர் வழியினருக்கும் நாளும் தூணி நெல்லாக ஆண்டுதோறும் ஒரு வேலி நில விளைவான 120 கலம் நெல், ஒரு பங்குக் காணியாக அரசாணை வழி நிலவும் கதிரும் உள்ளவரை இறைக்கோயில் கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டமையும் பதிவானதுடன், இவ்ஆணை வாய்மொழி பிறந்து ஓலை வழி வளர்ந்து கல்லில் பதிந்த வரலாறும் இடம்பிடித்தது.

இக்கல்வெட்டில் காணப்பெறும் சாந்திக்கூத்து, நாடகம், கூத்தர் பெயர் முதலியன சற்று விரிவாகக் காணத்தக்கன. சோழர் காலத்தில் பெருவழக்காயிருந்த கூத்து வகைகளுள் சாந்திக்கூத்து முதன்மையானது. சொக்கம், மெய், அவிநயம், நாடகம் எனச் சாந்திக்கூத்து நால்வகைப்படும். சுத்த நிருத்தமென்றும் அறியப்பட்ட சொக்கம் 108 கரணங்கள் கொண்டதாக விளங்கியது. தேசி, வடுகு, சிங்களமெனும் மூவகைத்தான மெய்க்கூத்து அகச்சுவை பற்றி அமைந்ததால் அகமார்க்கமென்றும் அழைக்கப்பட்டது. நிருத்தமென்றும் அறியப்பட்ட அவிநயக்கூத்தைப் பயில்விக்கத் திருவிடைமருதூரில் நட்டுவர் இருந்தமை கல்வெட்டால் அறியப்படும் உண்மையாகும்.

சாந்திக்கூத்தின் நான்காம் பிரிவான கதை தழுவி வரும் நாடகம் சோழர் காலத்தில் பரவலாகப் பயிலப்பட்டது. இதை இலக்கியங்களும் சுட்டுகின்றன. திருநல்லூர்க் கல்யாணசுந்தரேசுவரர் கோயிலில் கோவணநாடகமும் கடலூர் பாடலீசுவரத்தில் பூம்புலியூர் நாடகமும் திருநெடுங்களத்தில் சித்திரைத் திருவிழாவில் புவனசுந்தரி கல்யாணம், திருநெடுங்களப் புராணமான வினையபராக்கிரமம் ஆகிய நாடகங்களும் திருவாவடுதுறையில் திருமூலநாயனாரின் நாடகமும் நடிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. சாந்திக்கூத்தின் நான்கு பிரிவுகளிலும் திறம் பெற்றிருந்த ஆடவரும் பெண்டிரும் சாந்திக்கூத்தர்களாய்த் திகழ, தனித்தனிப் பிரிவுகளில் வல்லமை கொண்டிருந்தவர்கள் அவ்வப்பிரிவு சார்ந்து நிருத்தமாராயர், நிருத்தவிடங்கி, நாடகமாராயர், அவிநயக்கூத்தர், அகமார்க்க நட்டுவர் என்றழைக்கப்பட்டனர்.

கூத்தர் பெயரிலுள்ள திருமுதுகுன்றம் பாடல் பெற்ற ஊராகும். இந்நாளில் விருத்தாசலம் என்றழைக்கப்படும் இவ்வூரிலுள்ள இறைக்கோயில் கோபுரங்களின் உட்சுவரில் சுத்தநிருத்தமான கரணத்தை ஆடலழகியர் இலக்கணம் பிறழாமல் ஆடிக்காட்டும் அழகிய கோலங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டளவில் 108 கரணங்களில் பெரும்பான்மையன தொடராகக் காட்டப்பட்டுள்ள பெருமைக்குரிய ஐந்திடங்களில் முதுகுன்றம் ஒன்றாகும்.

திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆச்சாரியரின் பெயரிலுள்ள 'விஜயராஜேந்திர' எனும் தொடர் சிறப்புக்குரியது. பேரரசர் முதலாம் ராஜேந்திரரின் தலைமகனும் அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான முதலாம் ராஜாதிராஜர் மேலைச் சாளுக்கியரைப் போரில் வென்று அவர்தம் தலைநகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அந்நகரிலேயே வீராபிஷேகம் செய்து புனைந்து கொண்ட விருதுப்பெயரே, 'விஜயராஜேந்திரன்'. அவ்வெற்றியின் அடையாளமாய் ராஜாதிராஜரால் கொணரப்பட்ட வாயிற்காவலர் படிமம் இன்றும் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது. அதன் தளத்திலுள்ள 'விசயராசேந்திரதேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலர்' எனும் கல்வெட்டு மன்னரின் மேலைச்சாளுக்கிய வெற்றிக்குக் கட்டியம் கூறும். மன்னரின் பெருமைக்குரிய இவ்விருதுப்பெயரையே சாந்திக்கூத்தர் திருவாலர் தம் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார். இத்தகு இணைவுகள் சோழர் காலத்தில் பரவலாகக் கொள்ளப்பட்டமைக்குப் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன.

ஒரு கல்வெட்டில் எத்தனை தகவல்கள் என்று வியப்படைய வைக்கிறது ஒரு நாடகக்காணி கல்வெட்டான வரலாறு சொல்லும் இக்கல்வெட்டு.

அன்புடன்
இரா. கலைக்கோவன்.

உதவிய நூல்கள்

1. தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2, க. எண் 67.
2. இரா. கலைக்கோவன், சோழர் கால ஆடற்கலை, அலமு பதிப்பகம், சென்னை, 2003.
3. இரா. கலைக்கோவன், 'சாந்திக் கூத்து', இருண்ட காலமா?, சேகர் பதிப்பகம், சென்னை, 2014.
4. தி. வை. சதாசிவபண்டாரத்தார், பிற்காலச்சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1974.
5. வரலாறு 11, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சிராப்பள்ளி, 2001.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.